(என்னைக்) கொல்ல நினைக்கும் எவனோ ஒருவனுக்கு..


எவனோ ஒருவன் என்னைக் கொலை செய்ய ஏங்குகிறான்
ஏழை செல்வந்தனாக ஏங்குவது போல
செல்வந்தன் மேலும் செல்வந்தனாக ஏங்குவது போல
எழுத்தாளன் அங்கீகாரத்திற்கு ஏங்குவது போல
குழந்தைகள் பொம்மைகளுக்கு ஏங்குவது போல
சிங்கம் மானுக்கு ஏங்குவது போல
அவன் என்னைக் கொன்றுவிட ஏங்குகிறான்
ஏக்கம் மட்டுமல்ல; துடிக்கிறான்;
சிந்திக்கிறான்; திட்டமிடுகிறான்;
அத்தனையும் ஒளிந்துகொண்டே செய்கிறான்

அவனுக்கு என்னை தெரியாது
எனக்கும் அவனைத் தெரியாது
இருப்பினும் அவன் என்னைக் கொன்றுவிட ஏங்குகிறான்
இன்னும் சொல்லப்போனால்,
அவன் கொன்றுவிடத் துடிக்கும் மனிதர்களின் பட்டியலில்
நான் இருப்பது கூட
அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை
அவன் என்னை தாராளாமாகக் கொல்லலாம்..
அதற்கான உரிமையை நான் அவனுக்குத் தருகிறேன்
எனினும் அவனுக்கு நான் சொல்வதற்கென்று
சில விஷயங்கள் இருக்கின்றன..

"என்னைக் கொன்றுவிடத் துடிக்கும் எவனோ ஒருவனே,
நீ என்னை தாராளமாகக் கொல்லலாம்
அதற்கான உரிமையை நானுனக்குத் தருகிறேன்
எனக்குத் தெரியும் -
நீ என் இசைவிற்கோ
நீ என் அனுமதிக்கோ
காத்திருக்காதவன்
அதுபற்றி உனக்குக் கவலையுமில்லை
ஆயினும் நான் உன்னை அனுமதிப்பதன் மூலம்
உன் வேலை சுலபமாகும் என்பதை
நீ நிச்சயம் மறுக்கமாட்டாய்

இன்னொன்று -
நீ என்னை எப்படி வேண்டுமானாலும் கொல்லலாம்
பல வழிகளில்..
பல இடங்களில்..
எந்த வழி, எந்த இடம்
என்பது உன் விருப்பம்.

என் ரயில் பிரயாணத்தில்
நான் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும் போது
குண்டு வைத்துக் கொல்லலாம்

நான் பயணிக்கும் விமானத்தை
எங்கோ கடத்திக் கொண்டுபோய்
இடித்துக் கொல்லலாம்

நான் ஒரு பேரங்காடியில்
என் மகளுக்கு பொம்மை வாங்கிக்கொண்டிருக்கும் போது
சுட்டுக் கொல்லலாம்

இன்னும் எத்தனையோ வழிகளிலும் கொல்லலாம்
அதுபற்றி உனக்கு நான் சொல்லியா தெரியவேண்டும்?

உனக்கு மற்றொன்றையும் கூற ஆசைப்படுகிறேன் –
நீ கொல்வதற்கு முன்
தயவுசெய்து, என்னை அறிந்துகொள்
உன் பட்டியலில்
நான் இருப்பதை தெரிந்துகொள்
என்னைக் கொல்வதற்கான
காரணங்களை வைத்துக்கொள்
அறிந்து கொல்!
தெரிந்து கொல்!
காரணங்களை வைத்துக் கொல்!

துருவ கரடிக்குக் கூட
அதன் குட்டிகளைக் கொன்று
தின்றுவிட வேண்டியதன்
காரணமிருக்கிறது;
அவசியமிருக்கிறது
உனக்கு என்மீது தனிப்பட்ட முறையில்
எந்தவித பிரச்சினையுமில்லை
அதை நானறிவேன். 
நீயுமறிவாய்.
நீயும் நானும்தான் சந்தித்ததே கிடையாதே
அதனால் என்னைக் கொல்ல
எந்தக் காரணமும் உன்னிடம் இருக்காது
ஆனால் நான் கேட்பதெல்லாம்
அந்தக் காரணம் ஒன்று மட்டும்தான்
அரசாங்கம், முதலாளித்துவம்
மதம், சாதி என்பது போன்ற
பொதுவான காரணங்கள் எனக்கு வேண்டாம்
நீ என்னைக் கொல்ல விழைவதற்கான
தனிப்பட்ட காரணம் என்ன?
சொல்; பின் கொல்!

உன்னிடம் அதற்கான காரணங்களே இல்லையென்றாலும்
நீ என்னை கொல்ல இன்னொரு வழி இருக்கிறது. 
உண்மையில் இதைவிட எளிதானதொரு வழியை
உன் குருநாதர்கள் கூட உனக்கு
கற்றுக் கொடுத்திருக்கமாட்டார்கள்
உண்மையில் இந்த வழியில்
‘நீ கொலையே செய்யப்போவதில்லை’
ஆனால் நீ நினைப்பது நிறைவேறும்
ஆச்சர்யமாக இருக்கிறதா?
தொடர்ந்து வாசி.  

முதலில் நான் உன் பட்டியலில் இருக்கிறேன்
என்பதை உறுதிபடுத்திக் கொள்
என்பற்றிய தகவல்களைச் சேகரி -
நான் ஏற்கனவே கூறியது போல்
என்னைத் தெரிந்து கொள்
எனக்கு ஒரு நாற்பது வருடங்கள் கொடு
கோபப்படாதே.. சொல்வதைக் கேள்..

அந்த நாற்பது வருடங்கள்,
நீ என்னை நேரடியாகவோ மறைமுகமாகவோ
பின்தொடர்வது உன் விருப்பம்
பின்தொடர்வது சிரமமாக இருந்தால்
என்னுடன் நீ (என் காரில்கூட) பயணிக்கலாம்
என் இல்லத்திற்கு வந்து என் குடும்பத்துடன் உணவருந்தலாம்
நீ எங்களில் ஒருவனாகக் கூட ஆகலாம்
அத்தனையும் சாத்தியம்
ஆனால் உன் குறிக்கோளில் இருந்து
நீ பின்வாங்க வேண்டியதில்லை

உனக்கு என்னை பின்தொடர விருப்பமில்லையெனில்
நான் கூறிய நாற்பது வருடங்கள் கழித்து
என்னை வந்து சந்தி   
பெரும்பாலும் நான் இறந்திருப்பேன்
பெரும்பாலும் நீ கூட இறந்திருப்பாய்
நீ அதிர்ஷ்டக்காரனாயிருந்தால்,
இருபது ஆண்டுகளிலேயே கூட
என்னைப் பற்றிய அந்த நற்செய்தி
உன்னை வந்தடைய வாய்ப்பிருக்கிறது
அவ்வளவு ஏன்,
நீ இதை வாசித்துக்கொண்டே இருக்கும்போதுகூட
வந்தடைய வாய்ப்பிருக்கிறது
நீ உன் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே
நான் இறப்பதை காணும் வாய்ப்பு
உனக்கு கிட்டும்
அதனால் தான் கூறினேன் -
இந்த வழியில்,
நீ கொலையே செய்யப்போவதில்லை என்று
ஆயினும் உன் எண்ணம் நிறைவேறும்
நிறைவேறாமல் போவதற்கான வாய்ப்பே இல்லை

உனக்கு இன்னொன்று தெரியுமா?
உன் பட்டியலில் இருக்கும்
என் போன்ற பெரும்பாலோனோருக்கு
நீ கொல்லும் போது
உண்டாகும் வலியைவிட -
‘வலிமிகுந்தது அவர்களின் வாழ்க்கை’

எனவே தான் சொல்கிறேன் -
உன் கொலைத்தொழிலைக்
காலத்தின் கையில் கொடுத்துவிடு.


இப்படிக்கு, 
நீ கொல்லத் துடிக்கும் ஒரு சாமானியன்.

கருத்துகள்

  1. ரசித்தேன் ருசித்தேன்
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து என் எழுத்தைப் பாராட்டி, ஊக்கமூட்டிவரும் ரமணி ஐயா அவர்களுக்கு நன்றியும், வணக்கமும், நன்றியும்!!!

      நீக்கு
    2. தொடர்ந்து என் எழுத்தைப் பாராட்டி, ஊக்கமூட்டிவரும் ரமணி ஐயா அவர்களுக்கு நன்றியும், வணக்கமும், அன்பும்!!!

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..