மாதவன் இளங்கோ சிறுகதைகள்

அம்மாவின் தேன்குழல்




"வெளிநாட்டவர்கள்கூட இப்படிப் பேச மாட்டார்கள். ஆனால் ஒரு மூன்று, நான்கு வருடம் வெளிநாடுகளில் வாழ்ந்து விட்டு, விடுமுறைக்கு வரும் நம் மக்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே? என்னவோ, இந்தியாவிற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போலவும், நாமெல்லாம் இங்கு ஏதோ பரிதாபமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது போலவும் பேசுவார்கள். இது போன்ற மனிதர்களைக் கண்டாலே எனக்கு எரிச்சல் வந்து விடுவது உண்டு."


                                                                    ------------------

கல்லூரி கட்டணம்




"இந்த இரண்டு வருடங்களில் நிறைய கடன்கள் வாங்கிவிட்டேன். மேலும் யாரிடம் கடன் கேட்கலாம் என்று எனக்குத் ரொம்பத் தெரிந்தவர்கள், சுமாராகத் தெரிந்தவர்கள், எங்களை விட்டு என்றோ விலகிப் போன உறவுகள் என்று இப்படி எல்லோரையும் பட்டியலிட்டு, ஒவ்வொருவரிடமும் சென்று கடன் கேட்டேன். சொல்லி வைத்தார் போல அனைவரிடமிருந்தும் ஒரேமாதிரியான பதில் வரும். இதற்கு மேல் கடன் கேட்க எனக்கு யாருமேயில்லை என்கிற நிலை...." 



                                                                    ------------------

 அமைதியின் சத்தம்


"ஒரு மயான அமைதி குடிகொண்டிருந்த அந்த வீட்டில் ஏதோ மெல்லிய சத்தம் வந்து கொண்டிருந்ததை உணர்ந்தோம். என்னவென்று திரும்பிப் பார்த்தால், அந்த வீட்டின் மூலையில் ஒரு பாட்டி சாய்வு நாற்காலியில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த டிவியின் ஓசைக் கூட கேட்கவில்லை. இப்படி ஒரு சூழலில் என் குழந்தைகள் குதித்தால் மட்டும் இல்லை, வாயு பிரித்தால் கூட ராக்கெட் ஏவும் சத்தம் கேட்கும் அந்த வீட்டில்."


குறிப்பு: 
                                                              
இதுகாறும் நான் எழுதியுள்ள சிறுகதைகளின் தொகுப்பை 'அகநாழிகை பதிப்பகம்' வெளியிட்டிருக்கிறது. தொகுப்பிலுள்ள பெரும்பான்மையான சிறுகதைகள் வல்லமை இதழில் வெளிவந்தவை. வல்லமை என் முகவரியின் முதல் வரி என்றால் அதில் துளியும் மிகையில்லை. சில சிறுகதைகள் சொல்வனம், திண்ணை மற்றும் சிறகு இதழ்களில் வெளியானவை. ஓரிரு கதைகள் பிரசுரமாகாதவை

உண்மையில் நான் ஒரு வாசகன் மட்டுமே. என் எழுத்து ஒரு கிளைவிளைவே. என்னுடைய நண்பர்கள் குழுவில் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களை எளிதாக எண்ணிவிடலாம். இலக்கிய உலகிலும் எனக்கு யாருடனும் பழக்கமில்லை. என்னைப் போன்ற ஏகலைவன்களுக்கு, துரோணர்களின் புத்தகங்களே குருநாதர்கள். எனக்குத் தெரிந்த பலர் புத்தகத்தை எடுத்தால், வெகுவிரைவாக படித்து முடித்து விடுகிறார்கள். என்னாலெல்லாம் அவ்வளவு வேகமாக வாசிக்க முடியாது. ஒரு புத்தகத்தைப்  வாசித்துக்கொண்டு இருக்கும் போதே பளீரென ஒரு எண்ணம் வெட்டும். அதன் பின்னால் கிடுகிடுவென சிறிது நேரம் ஓடினால், அது தொடர்பான கடந்தகாலப் பதிவுகள் அனைத்தும் என் முன்னே வந்து கொட்டும். புத்தகத்தை மூடிவைத்துவிட்டு அப்படியே சிந்தனையில் மூழ்கிப் போய்விடுவேன். இருந்தாலும் சிதறிவிழும் சிந்தனைகளைக் கோர்த்துப் பார்க்கலாம், கவிதையாகவோ,  கட்டுரையாகவோ, சிறுகதையாகவோ எழுதிப்பார்க்கலாம் என்றெல்லாம் எனக்குத் தோன்றியதில்லை. பெல்ஜியத்திற்கு புலம்பெயர்ந்த போது உருவான வெறுமை, தாயக நினைவுகள், புதிய அனுபவங்கள் இவையே என்னை எழுதத் தூண்டியது என்று நினைக்கிறேன். 

வல்லமையில் வெளிவந்த என்னுடைய 'அம்மாவின் தேன்குழல்'  சிறுகதையை சிறந்த சிறுகதையாக, திரு. வெ. சா ஐயா அவர்கள் தேர்ந்தெடுத்து விமர்சிக்காதிருந்தால் நான் தொடர்ந்து எழுதியிருப்பேனா என்பது சந்தேகமே. என்னை எனக்கே அறிமுகப்படுத்திய பெருமை அவரையே சாரும். என் முகவரியின் இரண்டாம் வரி அவர். 

திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், வல்லமை இதழும், ஐக்கியா அறக்கட்டளையும் சேர்ந்து நடத்திய சிறுகதைப் போட்டியின் முடிவை அறிவித்து, போட்டியில் வென்ற எட்டு சிறுகதை ஆசிரியர்களையும் பாராட்டி, அவர்கள் அனைவரின் தனித்தொகுப்புக்காக காத்திருப்பேன் என்றார்.   

என்னுடைய சிறுகதைத் தொகுப்பு வெளிவரும் என்றெல்லாம் நான் கனவு கூட கண்டதில்லை. அகநாழிகை பதிப்பகம் சகோதரர் பொன்.வாசுதேவன் அவர்களால்தான் இது சாத்தியமானது. அவருக்கு என் மிகப்பெரிய நன்றி. அகநாழிகை என் முகவரியின் அடுத்த வரி! 

அதன் பிறகு வல்லமையின் ஆசிரியர் பவளசங்கரி மற்றும் சொல்வனம் பதிப்பாசிரியர் குழுவிலுள்ள நடராஜன் பாஸ்கரன் அவர்களைப் போன்ற  நலவிரும்பிகள், நண்பர்கள், உறவுகள், என் தளத்தின் வாசகர்களாகிய உங்கள் அனைவரின் தொடர்ந்த ஊக்குவிப்பும், நீங்கள் தந்த உற்சாகமும் என்னை இதுவரை கொண்டு வந்திருக்கிறது. அதற்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றிச்செண்டு! 

அம்மாவின் தேன்குழல் சிறுகதை தொகுப்பு:   



இணையம் வழியாக புத்தகம் வாங்க..



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..