மதிப்புரை.காம் தளத்தில் புத்தக மதிப்புரை.. (1)

திரு.சரவணன் அவர்களின் இந்த பின்னூட்டத்தின் மூலமாகவே மதிப்புரை.காம் தளத்தில் வெளியாகி இருந்த மதிப்புரை பற்றி அறிந்து கொண்டேன்.

//  http://mathippurai.com/2015/02/23/ammaavin-thaenkuzhal/ /// இதில் மதிப்புரை படித்து உங்கள் பெயரை இணையத்தில் தேடி இங்கு வத்தேன். நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள். பொதுவாக வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு வந்து பெற்றோரைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்ற குறையை பணத்தை அனுப்பி ஈடு செய்ய முயல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வரத்தான் முடியவில்லை, குறைந்தது அம்மாவை நல்ல வீட்டில் குடியிருக்க வைத்து வாடகை, செலவுகளுக்காகவாவது பணம் அனுப்பிவைக்க மாட்டார்களா?
- சரவணன்

நன்றி, சரவணன்!

'அம்மாவின் தேன்குழல்' புத்தகத்தை வாசித்து, மதிப்புரையை எழுதியுள்ள திரு.பா.பூபதி அவர்கள் முன்வைத்த கருத்துகளை பெருமதிப்புடன் ஏற்றுக்கொண்டு, என் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.பூபதி அவர்களின் மதிப்புரை: 

இந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ஆசிரியரின் முன்னுரை. மிகவும் நேர்த்தியான முன்னுரை. அதில் அவர் பிரயோகித்து இருக்கும் வார்த்தைகள் அவரின் வாசிப்பு அனுபவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. முன்னுரையைப் படிக்கையில் இவர் ஒரு புதிய எழுத்தாளர் என்று தோன்றவில்லை. ஆனால் அதே உணர்வு கதைகளைப் படிக்கும்போது ஏற்பட்டதா என்பதே கேள்வி.
முதலில் இந்தக் கதைகளை சிறுகதைகள் என்று சொல்லமுடியவில்லை. காரணம் சிறுகதைக்கான வடிவம் இதில் இல்லை. சின்ன சின்ன கதைகள் என்று சொல்லலாம் அல்லது மனதை நெகிழச்செய்யும் நிகழ்வுகள் என்று சொல்லலாம். ஒரு வெளிநாட்டில் வாழும் இந்தியருக்கு பலவிதமான நல்ல அனுபவங்கள், ஒப்பீட்டு சிந்தனைகள் தோன்றுவது இயல்பு. அவற்றை சிறுகதைகளாக மாற்ற முயற்சி செய்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.
கதையின்மூலம் வாசிப்பவர்களுக்கு ஏற்படவேண்டிய அனைத்து உணர்வுகளையும் ஆசிரியரே பக்கம் பக்கமாக எழுதிவிடுகின்றார். இதனால் கதையைப் படிக்கையில் எந்தவிதமான உணர்வுகளும் ஏற்படாமல் போகிறது. உதாரணமாக ஒருவர் கஷ்டப்படுகிறார் என்றால் அவர் எவ்வாறு கஷ்டப்படுகிறார். அவரின் கஷ்டம் எவ்வளவு ஆழமானது. அந்தக் கஷ்டத்தினால் அவர் எப்படி வாழ்கிறார் என அனைத்தையும் ஆசிரியரே எழுதிவிடுகின்றார். இதனால் கதை பக்கம் பக்கமாக நீண்டுகொண்டே செல்கிறது. சென்னையில் பனி பெய்கிறது என்றால் வாசிப்பவர்கள் அவர்களின் தலைமீது பனி இறங்கியதை உணர்ந்திருக்க வேண்டாமா! எதையும் உணர்த்தவில்லை. முடிந்தவரை அவரே அனைத்தையும் சொல்லியபடி செல்கின்றார்.
கதையில் வரும் கதாபாத்திரங்கள் நாம் பலகாலமாக கேட்டு சலித்த சமுதாயத்தின் மீதான சாடல்களை கிண்டலாக, வேதனையாக வெளிப்படுத்துகின்றன. அவற்றைப் படிக்கையில் எந்தவிதமான உணர்வும் ஏற்படவில்லை.
உதாரணமாக அம்மாவின் தேன்குழல் கவிதைத்தனமான அழகான தலைப்பு. ஆனால் கதை பல நூற்றாண்டுகளாக நாம் பேசிவரும், பார்த்துவரும் விசயம்தான். பெற்றோரை மறந்துவிட்டு மகன் சொகுசாக வேறு ஒரு இடத்தில் வாழ்வது. அவனுடைய சொகுசான வாழ்க்கையை தெரிந்தும் அல்லது தெரியாமலும் அவன்மேல் மேலும் மேலும் அன்பைப் பொழியும் அதே சமயத்தில் தன்னுடைய கஷ்டங்களை சகித்துக்கொள்ளும் தாய்… இந்தக் கதையை மிகவும் உருக்கமாக எழுதியிருக்கின்றார். இவை உருக்கமான விசயம்தான். நாம் கவனம் செலுத்தவேண்டிய விசயம்தான். ஆனால் திரைப்பட விமர்சனம் செய்யும்போது சொல்வார்களே இந்தப் படத்தை போதுமான அளவுக்கு நாம் விமர்சனம் செய்துவிட்டதால் அடுத்த படத்திற்கு செல்வோம் என்பார்களே அதுபோன்ற உணர்வு ஏற்பட்டு விடுகிறது.
இந்தப் புத்தகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை முடி. மற்ற கதைகள் அனைத்தும் ஏற்கெனவே படித்ததாகவோ அல்லது தெரிந்த விசயமாகவோ இருந்தன. ஆனால் இந்த முடி கதை புதியதாக இருந்தது. அது மட்டுமல்லாமல் தேவையில்லாத வர்ணனை, செயற்கையான புலம்பல்கள் இல்லாமல் கச்சிதமாக இருந்தது. முடி இல்லாதவர்கள் உண்மையில் எப்படி நடந்துகொள்வார்கள், அதை அப்படியே வெளிப்படுத்துவதாக இருந்தது. மறக்கமுடியாத கதையாக முடி கதை அமைந்திருந்தது.
ஒரு நெகிழ்வான நிகழ்ச்சியை கதையாக மாற்றும்போது அது செய்திபோல் இல்லாமல் அந்த நிகழ்ச்சியை வாசிப்பவர்கள் உணர்ந்துகொள்ளும்படி அமைந்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ஒரு உதாரணம் சொல்கிறேன். திரு.ஜெயமோகன் அவர்களுடைய நதிக்கரையில் சிறுகதையை வாசித்தீர்களானால் அதன் முடிவை படிக்கும்போது மனதில் திக்கென்ற உணர்வு ஏற்படும். ஆனால் எல்லோராலும் சிலாகித்து பேசப்பட்ட யானை டாக்டர் கதையை சமீபத்தில் படித்தேன். அதில் நம் வாலிபர்களால் குடித்துவிட்டு காட்டில் வீசப்படும் உடைந்த பாட்டில்கள் மூலம் யானைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்று எழுதியிருந்தார். மிகவும் நீளமான கதை. ஆனால் அது ஒரு நெகிழ்ச்சியான துன்பத்தைத் தரக்கூடிய செய்தி. அந்தச் செய்தியை அவர் கட்டுரை எழுதியிருந்தாலே இதே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் அவர் அதை கதையாக எழுதியிருப்பார். அந்தக் கதையைப் படிக்கும்போது எந்தவிதமான உணர்வும் ஏற்படவில்லை, அந்தக் கதையில் வரும் யானை தொடர்பான செய்திதான் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தச் செய்தியைக் கொண்டுபோய் அந்தக் கதையில் செயற்கையாகப் பொருத்தியதுபோல் இருந்தது. யானை டாக்டர் கதையும் நதிக்கரையில் கதையைப்போல் அமைந்திருந்தால் அதன் வீரியம் வேறுமாதிரி இருந்திருக்கும்.
நாவல், சிறுகதைகள் மூலமாக ஒரு காலகட்டத்து வாழ்க்கையை அறிந்துகொள்ள முடியும். அதனால்தான் இலக்கிய வாசிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்று எனது நண்பர் சொல்லியிருந்தார். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அவர்தான் ஞாபகத்திற்கு வந்தார். காரணம் இந்தப் புத்தகத்தின் மூலம் ஓரளவிற்கு வெளிநாட்டு வாழ்க்கையை, பிரச்சனைகளை, இழப்புகளை அறிந்துகொள்ள முடிகிறது.
– பா. பூபதி

புத்தக மதிப்புரையை வெளியிட்டு சிறப்பித்துள்ள மதிப்புரை.காம் தளத்திற்கும் நன்றி!!

இணைப்பு: http://mathippurai.com/2015/02/23/ammaavin-thaenkuzhal/

'அம்மாவின் தேன்குழல்' புத்தகம் அகநாழிகை இணைய விற்பனையகத்தில் மார்ச் இறுதி வரை 30% தள்ளுபடி விலையில் (ரூ.91) கிடைக்கிறது.

இணைப்பு: http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1832








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..