காடுகளாகும் நாடுகள்..

டந்த வாரம் நண்பன் விக்ரம் பெல்ஜியத்திற்கு வந்திருந்தான். கடைசியாக அவனை 2010-இல் பார்த்தது. வியாழனன்று மாலை அவனுடன் ப்ரசல்சு நகர மையத்திலுள்ள கிராண்ட் ப்ளாசிற்குச் சென்றிருந்தேன். எங்கு பார்த்தாலும் இராணுவ வீரர்களும், காவலர்களும் ஆயுதமேந்தியபடி திரிந்துகொண்டிருந்தார்கள். ஒன்றும் புரியவில்லை. ஓரிருவர் என்னையும் என் நண்பனையும் கூட சந்தேகக் கண்ணோடு பார்ப்பது போன்று எங்களுக்குத் தோன்றியது. கார்களைக் கூட அனுமதிக்காததால் சற்றுத் தொலைவில் நிறுத்திவிட்டுச் செல்ல வேண்டியிருந்தது. என்ன நடக்கிறது ப்ரசல்சு நகரில் என்று நினைத்தேன். க்ராண்ட் ப்ளாசிற்கே உரித்தான அந்த உயிரோட்டமே இல்லை. எனக்கு நெருடலாக இருந்தது. பாரீஸ் நகர தாக்குதலுக்குப் பிறகு முற்றிலும் மாறிவிட்டது, வழக்கமாக இப்படி இருக்காது என்று என் நண்பனிடம் கூறினேன். அடுத்த நாள் மாலை அப்தேஸ்லாம் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்தது. அப்தேஸ்லாம் பதுங்கி இருந்த இடம் மையத்திலிருந்து நீண்ட தூரமில்லை.நேற்றைக்கு இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு! இந்தத் தாக்குதலை கடந்த வாரமே அறிந்திருந்த பிரசல்ஸ் நகரம் மௌனமாக அழுதுகொண்டிருந்ததாகவே எனக்கு இப்போது தோன்றுகிறது.
என்னளவில் ஒவ்வொரு நகரும் ஒரு உயிருள்ள ஜீவன்தான். நான் வாழ்ந்த ஒவ்வொரு நகரமும் எனக்கு நெருக்கமானதொரு நண்பனாக இருந்திருக்கிறது. எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொடுத்த ஆசானாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு நகரிலும் விழுந்திருக்கிறேன், எழுந்திருக்கிறேன், கலங்கியிருக்கிறேன், சிரித்திருக்கிறேன். ஒவ்வொரு நகரைப் பற்றியும் சொல்வதற்கு எனக்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இடம்மாறிச் செல்லும் போது என்னில் ஒரு பகுதியை அங்கேயே விட்டுச் செல்வது போலவே உணர்கிறேன்.
மும்பை நகரம் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளான போதும்,
சென்னை நகரம் சுனாமியாலும், பெருமழையால் உருக்குலைந்த போதும், பாரீஸ் நகரம் மும்பையில் நிகழ்ந்தது போன்றதொரு கொடுமையான தாக்குதலை எதிர்கொண்ட போதும் எனக்கு நெருக்கமானவர்கள் தாக்கப்பட்டதாகவே உணர்ந்திருக்கிறேன்.
ப்ரசல்சும் நான் வாழ்ந்த நகரம். இப்போதும் நான் பணிநிமித்தமாக அடிக்கடிச் சென்றுவரும் நகரம். பாரீஸ் எனக்கு மிகவும் பிடித்தமானதொரு நகரம். பாரீஸ் என்றாலே கொண்டாட்டம்தான். ப்ரசல்ஸ் நகரம் பாரீஸ் அளவிற்கு ஆர்ப்பாட்டமான நகரமில்லை. இருந்தாலும் அதற்கான கொண்டாட்டங்களும் உண்டு. ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ போன்ற அமைப்புகளின் தலைமையகங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் ஐரோப்பாவின் இதயம் இன்றைக்குச் செயலற்றுக் கிடக்கிறது.
நேற்று மாலை முழுவதும் நண்பர்களிடமிருந்து ஒன்றடுத்து ஒன்றாக தொலைபேசி அழைப்புகள்; குறுஞ்செய்திகள். 'நீங்கள் வீட்டிற்குப் போய்விட்டீர்களா?', 'நான் பிரசல்சுக்கு போகவில்லை. மெக்கலனிலுள்ள நண்பன் வீட்டில் இருக்கிறேன்.' , 'நான் பாதுகாப்பாக வந்து சேர்ந்துவிட்டேன்' என்று.
நாடுகள் காடுகளாகிக் கொண்டிருக்கின்றன. கொடிய மிருகங்களுக்கு பயந்து நடுங்கிக்கொண்டே விழிப்புணர்வோடு இரை தேடிச் செல்லும் மான்களாகிவிட்டோம் நாம். புலிகளும் சிங்கங்களும் எந்நேரமும் எங்கிருந்தும் தாக்கலாம். அவைகளிடம் சிக்கிக்கொண்டு
இரையாகிவிட்டிருந்த சக மான்களுக்கு அனுதாபப்படக்கூட அவகாசமின்றி தப்பித்து எங்கோ தெறித்து ஓடும் ஒரு மானைப் போல என்னை உணர்ந்தேன், நேற்று ப்ரசல்சு நெடுஞ்சாலையில் சீறிக்கொண்டு தீனன் நகருக்குத் தப்பித்துச் சென்று கொண்டிருந்தபோது.

(முகநூல் பதிவு: 23 மார்ச்சு 2016)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..