தீனன் நூலகம் (Tienen Bibliotheek)

சென்ற வாரம் தீனன் (Tienen) நகர குழந்தைகள் நூலகத்துக்கு என் மகனுடன் சென்றிருந்தேன். உண்மையில் குழந்தைகளுக்கான இதுபோன்றதொரு நூலகத்தை இதுவரை நான் கண்டதில்லை. இலக்கியம், தகவல் களஞ்சியங்கள், புதிர்கள், விளையாட்டு, பாட புத்தகங்கள் என்று வயதுவாரியாக அழகாக பிரித்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். இது தவிர எண்ணற்ற குழந்தைத் திரைப்பட மற்றும் விளையாட்டு டி.வி.டி-கள், ப்ளூரே தகடுகள். நான் சிறுவயதில் பார்த்த ஹோம் அலோன், ஜுமாஞ்சி திரைப்படங்களிலிருந்து சென்ற வருடம் வெளியான தி குட் டைனசார் வரை அனைத்து திரைப்படங்களும் கிடைக்கிறது. எதை எடுப்பதென்றே தெரியாமல் ஒரு பத்து படங்கள் எடுத்து வந்தோம். ஒவ்வொரு குழந்தையும் பத்து டி.வி.டி-கள், இருபது புத்தகங்கள் வரை இலவசமாக எடுத்துச் செல்லலாம். ஒரு மாதத்திற்குள் திருப்பித் தந்துவிட வேண்டும். தாமதமானால் அபராதம் ஒன்றும் அதிகமில்லை. ஒரு நாளைக்கு 5 சென்டுகள் (மூணரை ரூபாய்).

எடுத்துவந்த புத்தகங்களில் அதற்குள் நான்கு புத்தகங்களை வாசித்து முடித்துவிட்டான் என் மகன். அவன் வாசிக்கும் வேகம் எனக்கே பிரமிப்பூட்டுகிறது. அவனுடன் அமர்ந்து படிப்பதற்காக இந்தப் புகைப்படத்திலுள்ள புத்தகத்தை எடுத்து வந்தேன். கிட்டத்தட்ட ஆயிரம் வார்த்தைகள், அவற்றின் தோற்றம் பற்றிய வேடிக்கை கதைகளை (உண்மையும் உண்டு) வாசித்துக்கொண்டிருந்தோம். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல வார்த்தைகளின் தோற்றக் கதைகள் எனக்குப் புதியவை. உதாரணத்துக்கு School, Quiz, Panic போன்றவை. School என்ற ஆங்கில வார்த்தை Skhole என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து தோன்றியதாம். அதன் பொருள் என்ன தெரியுமா? 'ஓய்வு நேரம்'! அதைப் பற்றிய கிரேக்கப் பின்புலம் வியப்பளிக்கிறது. இன்றைக்கு புத்தக மூட்டைகளை முதுகில் சுமந்துகொண்டு SKHOLE -க்கு செல்லும் குழந்தைகளைப் பார்த்தால் பண்டைய கிரேக்கர்கள் என்ன சொல்வார்கள்? What an irony! மேலும் இந்தப் புத்தகத்திலுள்ள Saxophone, Valetine's day போன்ற வார்த்தைகளுக்கான கதைகள் ஏற்கனவே அறிந்தவை.


ரிச்சர்ட் கெரேவின் 'ஹாச்சி' திரைப்படத்தையும் எடுத்து வந்து பார்த்தோம். 2009-ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தை எப்படி பார்க்காமால் விட்டேன் என்று தெரியவில்லை. டோக்கியோவில் நடந்த உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தை பார்த்துவிட்டு 'நாய்களுக்கு ஆஸ்கார் கொடுக்கமாட்டார்களா?' என்ற கேள்வி மனதில் எழுந்தது. என் பாட்டி இறந்த பின்பு அவர் வளர்த்த நாய் உணவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல் இறந்துவிட்டதைப் பற்றி என் தந்தை கூறியது நினைவுக்கு வந்தது. அதுபற்றி என் மகனிடம் கூறினேன். படத்தை பார்த்ததிலிருந்தே எனக்கொரு ஹாச்சி நாய் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருக்கிறான் என் மகன். அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம்.

தீனன் நூலகத்தில் ஆரம்பித்து எங்கோ சென்றுவிட்டேன் என்று நினைக்கிறேன். இத்தனைக்கும் தீனன் ஒரு குறுநகரம். இங்கேயே இப்படி இருக்கும்போது லூவன் போன்ற நகரங்களில் எப்படி இருக்கும் என்பதை எளிதாக அனுமானிக்க முடிகிறது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் லூவன் நகரில்தான் வசித்து வந்தோம். ஒருநாள் கூட அங்கு குழந்தைகள் நூலகத்துக்கு சென்றதில்லை. சென்று பார்க்கவேண்டும்.

நானும் என் தம்பியும் என் தந்தையுடன் சிறுவயதில் திருப்பத்தூர் நூலகத்துக்கு செல்வோம். இன்றைக்கு தீனன் நூலகத்தில் இந்தப் புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாமா, எனக்கு அந்தப் புத்தகம் வேண்டும், இந்தப் புத்தகத்தை என் பள்ளியில் பார்த்திருக்கிறேன் என்று என் மகன் என்றெல்லாம் கூறிக்கொண்டே நூலகத்தில் இப்படியும் அப்படியும் ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

குழந்தைகளை வேறு எங்கும் அழைத்துச் செல்லவில்லையென்றாலும் பரவாயில்லை நூலகத்துக்கு, குறைந்தபட்சம் அருகிலுள்ள புத்தகக் கடைகளுக்காவது அழைத்துச் செல்லுங்கள்.

(முகநூல் பதிவு: 19 மார்ச்சு 2016)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..