நீரூற்று நகரம்

டந்த வாரம் 'ஸ்பா' (SPA) நகரம் சென்றிருந்தேன். ஸ்பா, பெல்கியத்தின் (Belgium) தெற்கு வலோனிய பிராந்தியத்திலுள்ள ஒரு குறுநகரம். வடக்கே ப்ளெம்மிய பிராந்தியத்தின் எல்லையில் நான் வசிக்கும் தீனன் நகரிலிருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தூரம். குறுக்குச் சாலைகளற்ற அதிவிரைவு சாலை கிட்டத்தட்ட ஸ்பா வரை செல்வதால் ஐம்பது நிமிடங்களில் சென்று விடலாம். அங்கிருந்து லக்சம்பர்க், ஜெர்மனி, பிரான்சு ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகளையும் சுமார் ஒரு மணிநேர கார் பயணத்தில் தொட்டுவிடலாம்.

பெல்கியத்திலேயே எழில்மிக்க பகுதி எது என்று யாரைக் கேட்டாலும் 'ஆர்டென்' (Ardennes) மலைத்தொடரைத்தான் கூறுவார்கள். பெல்கியத்தில் தொடங்கி லக்ஸம்பர்க், பிரான்ஸ் நாடுகள் வரை பரந்து விரியும் இந்த வனப்பகுதி விடுமுறை விடுதிகளுக்கும், ஓய்வகங்களுக்கும் புகழ்பெற்றது. எழுபது பேர் தங்கக்கூடிய அளவிற்கு பெரும் பண்ணை வீடுகளும் உண்டு. என்னுடன் பணியாற்றும் பல நண்பர்கள் அடிக்கடி ஆர்டென் வனப்பகுதிக்கு சென்றுவிடுவார்கள். ஒரு வருடத்துக்கு முன்பே தெளிவாகத் திட்டமிட்டு முன்பதிவு செய்துவிடுவார்கள். அத்தகைய 'ஆர்டென் வனப்பகுதியின் முத்து' என்று 'ஸ்பா' நகரை அழைக்கிறார்கள்.


மரங்களடர்ந்த ஆர்டென் பள்ளத்தாக்கில், மலைத்தொடர்களும், ஆறுகளும், நீரூற்றுகளும் சூழ அமைந்த 'ஸ்பா' நகரிலுள்ள கனிம, வெப்ப நீரூற்றுகள் நோய்தீர்க்கும்தன்மை கொண்டவை. இன்று உலகெங்கும் பரவிக் கிடக்கும் லட்சக்கணக்கான ஸ்பாக்கள் (SPAs) அனைத்திற்கும் தோற்றுவாய் பெல்கியத்திலுள்ள ஸ்பா நகரம்தான் என்பது பலருக்குத் தெரியாது. அங்குள்ள 'லே தெர்மே டி ஸ்பா' (Les Therme De Spa) என்கிற ஸ்பாவில் 33 டிகிரி சூடேற்றப்பட்ட நீர் நிரம்பிய பரந்து விரிந்த நீச்சல் குளத்தில் மூன்று மணிநேர குளியல், ஒரு மணிநேரம் வெப்ப நீரூற்றில் அமர்ந்தபடி ஒய்வு, பிறகு நீராவிக் குளியல் என்று ஐந்து மணிநேரம் ஸ்பாவுக்குள்ளே நிம்மதியாய் கழிந்தது. ஒரு குன்றின் மேல் அமைந்த அந்தக் கண்ணாடி மாளிகையிலுள்ள நீச்சல் குளத்தில் இருந்தபடியே ஸ்பா நகரைச் சுற்றி அரண்போல் சூழ்ந்துள்ள ஆர்டென் மலைத்தொடரைப் பார்த்து ரசிக்கலாம். ஓரிரு மாதங்கள் கழித்துச் சென்றிருந்தால் இன்னும் பசுமையாக இருந்திருக்கும்.



SPA, ஒரு நகரின் பெயராக மட்டுமல்லாமல், ஒரு வர்த்தகச் சின்னமாகவும் ஆனது இன்றோ நேற்றோ இல்லை. இன்றைக்கும் இந்தியாவில் கிடைக்கும் SPA கனிமநீர் பாட்டில்கள் பதினாறாம் நூற்றாண்டிலிருந்தே SPA நகரிலிருந்து தயாரிக்கப்பட்டு, விற்கப்பட்டு வருபவைதான். எனவே நீரை பாட்டிலில் அடைத்து விற்கும் பழக்கம் நேற்றுத் தொடங்கியதல்ல. அதற்கு மருத்துவ, நிலவியல் மற்றும் வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. இன்றைக்கு, 'Bottled Water' is a billion dollar industry.



'லாக் டி வார்பா' (Lac De Warfaaz) ஏரியைச் சுற்றி நடையைத் துவங்கி பதினைந்து நிமிடத்திற்குள்ளாகவே பலத்த காற்று வீசத் தொடங்கியதால், நடையை முடித்துக்கொண்டு, ஒரு சிறிய அருந்தகத்துக்கு சென்று குளிருக்கு சூடான காபி அருந்திவிட்டு, மீண்டும் நகருக்கு வந்து, நகர்மையத்தில் அமைந்த 'கசினோ டி ஸ்பா' (Casino de Spa) சென்றோம்.




கசினோ டி ஸ்பா உலகின் பழமைவாய்ந்த பிரமாண்டமான சூதாட்டக் கூடம். லியாஷே (Liege) மாகாணத்தின் ஆயர் 1763-ல் கசினோவின் கட்டிடப்பணியை துவக்கிவைத்துள்ளார்.


அதன் பிறகு அங்கிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள 'பெல்கியம் கிராண்ட் ப்ரீ பார்முலா 1 கார் பந்தய சுற்று ஸ்பா - பிராங்கோஷா(ம்)' (Circuit de Spa-Francorchamps, Belgium Grand Prix Formula 1) இருக்கும் 'ஸ்டாவ்லோ' (Stavlot) பகுதிக்குச் சென்றோம். ஸ்டாவ்லோவுக்கு வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையின் இருபுறமும் இயற்கை எழில்கொண்ட நிலப்பரப்பை பார்த்துக்கொண்டே, தமிழ் பாடல்களைக் கேட்டுக்கொண்டு காரை ஓட்டிச் செல்வது என்பது ஒரு வரம் என்றே தோன்றியது.

பார்முலா 1 ரசிகர்களுக்கும், பந்தயச் சுற்றில் கார் ஓட்ட விரும்புபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இருக்கிறது. வருடத்திற்கு ஆறு நாட்கள் அந்தச் சுற்றில் பொதுமக்களுக்கும் ஓட்ட வாய்ப்பு அளிக்கிறார்கள். ஆனால் முன்பதிவு செய்து விட வேண்டும். அமெச்சூர்களுக்குக் கட்டுப்பாடுகளும் அதிகம். விலை ஒன்றும் நான் நினைத்ததுபோல் அதிகமில்லை. நூறு யூரோ. வரும் ஆகஸ்டு மாதம் நிகழவிருக்கும் பார்முலா 1 போட்டியைப் பார்ப்பதற்கே டிக்கெட் விலை ஐநூறு யூரோ எனும் பட்சத்தில் அங்கு நம்முடைய காரை ஓட்டுவதற்கு நூறு யூரோ அதிகமில்லைதானே?
பார்முலா 1 மட்டுமல்ல; பறக்க விரும்புபவர்களுக்குமான இடம் 'ஸ்பா'. 'ஸ்கைடைவ் ஸ்பா' மையம் நகரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. எனக்கும் உயரத்துக்கும் ஆகாது. ஐபிள் டவரில் இரண்டாம் நிலையிலிருந்து உச்சிக்கு ஒவ்வொருமுறை செல்லும்போது மின்தூக்கியில் என் கால்கள் என் கட்டுப்பாட்டிலேயே இருந்ததில்லை. எங்கிருந்து பறப்பது? இருந்தாலும் ஒருமுறையாவது ஸ்கைடைவ் புரிந்து இந்த அச்சக்கோளாறை சரி செய்ய வேண்டும் என்கிற அவா இருக்கிறது.  அறுபது யூரோ அதிகமாகக் கொடுத்தால் மணிக்கட்டில் ஒரு கேமராவைப் பொறுத்திவிடுகிறார்கள். அது நாம் ஆகாயத்திலிருந்து கீழே விழுவதையும், பறப்பதையும், நம் உணர்வுகளையும் நாம் போடும் கூச்சல்களையும் படம் பிடித்துவிடும்.



குறிப்பு: இந்த காணொளி SPA நகரில் எடுக்கப்பட்டதல்ல. முகநூலில் இந்தப் பதிவு எழுதிய சில நாட்கள் கழித்து டீஸ்ட் நகருக்கு அருகே ஷ்காபன் என்ற இடத்தில் நான் 'ஸ்கைடைவ்' செய்யும்போது எடுத்தது.

பெல்கியம் ஐரோப்பாவிலுள்ள ஒரு சிறிய நாடு என்பதைத் தவிர வேறு எதுவும் பலருக்குத் தெரியாது. எனவே அவ்வப்போது பெல்கியம் பற்றி எழுதிப் பதிவிட இருக்கிறேன். சிறிய நாடுதான் ஆயினும் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளில் பெல்கியம் இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளி. அவ்வளவு ஏன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்புகளின் தலைமையகங்கள் பெல்கியத்தின் தலைநகரான பிரசல்ஸ் நகரில்தான் இருக்கின்றன. பிரசல்ஸ் ஐரோப்பாவின் இதயம். நெப்போலியன் தோல்வியுற்ற உலகப் புகழ்பெற்ற வாட்டர்லூ போர் நடைபெற்ற வாட்டர்லூ (Waterloo) என் வீட்டிலிருந்து ஒன்றரை மணிநேர தூரம்தான். அன்றைய போர்க்களம் இன்றைக்குப் பரந்து விரிந்த விளைநிலமாகக் காட்சியளிக்கிறது. டச்சு மொழியில் 'பெல்கிய' என்றும், ஜெர்மானிய மொழியில் 'பெல்கியன்' என்றும், பிரெஞ்சு மொழியில் 'பெல்ஜிக்' என்றும் அழைக்கப்படும் பெல்ஜியத்தை தமிழில் 'பெல்கியம்' என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.
அடுத்தமுறை SPA-க்களுக்குச் சென்றாலோ, SPA நீரை பருகினாலோ, அல்லது SPA என்கிற வார்த்தை எங்கேனும் தென்பட்டாலோ உங்களுக்கு பெல்கியம் நினைவு நிச்சயம் வரும் அல்லவா?
இன்னும் சுவாரசியமான தகவல்களுடன் விரைவில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..