மதிப்புரை.காம் தளத்தில் புத்தக மதிப்புரை.. (2)

மதிப்புரை.காம் தளத்தில் மற்றுமொரு மதிப்புரை. இந்த மதிப்புரையை எழுதியிருக்கும் மா. ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா மற்றும் இதற்கு முந்தைய மதிப்புரையை எழுதியுள்ள பா. பூபதி இருவரும் நான் அறிந்திராதவர்கள். வாசகர்கள் இவ்விருவரின் விமர்சனங்களையும், கருத்துகளையும் பெருமதிப்புடன் ஏற்றுக்கொண்டு, இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

'காதிரைச்சல்' எனும் கொடுங்கனவில் உழன்று கொண்டிருக்கையில் மதிப்புரை.காம் தளத்தில் வெளியாகியுள்ள இந்த மதிப்புரைகள் சற்று ஆறுதல் அளிக்கிறது. காதிரைச்சலைப் (Tinnitus) பற்றி விரிவாக எழுதுகிறேன்.

மா. ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா அவர்களின் மதிப்புரை:

ஆசிரியர் தன் முன்னுரையிலேயே இப்புத்தகத்தின் முழு அறிமுகத்தையும் செய்துவிட்டார். அவர் கூறுவது போல இப்புத்தகம் புலம் பெயர்ந்தவர்களின் பண்பாட்டுப் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசுவதாய் தோன்றினாலும், பல விழுமியங்களைத் தொட்டே செல்கிறது.
இச்சிறுகதைத் தொகுப்பு பதினைந்து சிறுகதைகளைக் கொண்டது. இதுமட்டுமன்றி இந்தத் தொகுப்பைப் படிக்கத் தூண்டுவதாக ஆசிரியரின் அறிமுகவுரையில் அவரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை வெளிப்படுத்தியிருக்கிறார். உண்மையில் அதுதான் இப்புத்தகத்தின் மிக முக்கிய பகுதி என்பேன். இச்சிறுகதைகளில் கிட்டதட்ட பாதிக்குமேற்பட்ட கதைகள் புலம் பெயர்ந்தவர்களின் கதையாக இருக்கிறது. அதில் பண்பாடு வேறுபாடு, ஒரு புலம் பெயர்ந்தவரின் எண்ணவோட்டம் என்று செல்கிறது.
இப்புத்தகத்தின் இன்னொரு பலம் ஆசிரியர் அவர் தினம்தினம் காணும் நிகழ்வுகளை பதிந்திருப்பது தான். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி, வானிலை முன்னறிவிப்பு, தொடர்வண்டி அமைப்பு, முகநூல் என இப்பட்டியல் நீள்கிறது.
இப்புத்தகத்தின் தலைப்பைக் கொண்ட சிறுகதை பலரின் மனசாட்சியை கேள்வி கேட்கும். இது ஒரு புலம் பெயர்ந்த மனிதரின் வாழ்வியலையும், அவர் பெற்றோரின் நிலையையும் ஆராய்கிறது. அந்த புலம்பெயர்ந்த மனிதரின் இடத்தில் தன் வீட்டில் வைத்துக்கொண்டே பெற்றோரை அவமதிப்பவர்களையும் சேர்த்துக்கொள்ளும், அவர்களையும் இது நிச்சயம் சீண்டிப் பார்க்கும்.
இப்புத்தகத்தின் இன்னொரு முக்கியமான படைப்பு ‘பனிப்போர்வை’. அதீத கற்பனையுடன் ஒரு படைப்பு. அதன் முடிவு நிச்சயம் நம்மை யோசிக்கத் தூண்டுகிறது.
‘அமைதியின் சத்தம்’ என்ற படைப்பும், ‘முடி’ என்னும் படைப்பும் பிறரின் இடத்தில் நம்மை நிறுத்தி ஒரு விழுமியத்தை அணுகுவது எவ்வாறு என்பதை நமக்கு கற்பிக்கின்றன. அதுவும் ‘முடி’யில் கதை எதை நோக்கி நகர்கிறது என புரியாமல் பயணம் செய்யும் பொழுது இறுதியில் நம்மை தெளியவைக்கிறது. ‘அமைதியின் சத்தம்’ தனிமையில் இருக்கும் வயதானவர்களை படம் பிடித்துக் காட்ட முயற்சிக்கிறது.
‘நிறங்கள்’, மிக வித்தியாசமானதொரு படைப்பு. ஆனால் அது ஆரம்பத்திலேயே கணிக்கக்கூடியதாய் இருப்பதால் பெரிதாக ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை.
‘கல்லூரி கட்டணம்’ என்னும் படைப்பு இன்றைய தேதியில் சமூகத்தின் மிக முக்கியமான ஒரு பிரச்சனையை அலசும் ஆழ்ந்ததொரு படைப்பு. நாம் ஒரு நேரம் உணவுக்கு செலவழிக்கும் பணம் பலரின் வாழ்க்கையின் தடத்தை மாற்றும் சக்தியுடையது என்பதைக் கூறுகிறது. கல்வியை வியாபாரமாய் செய்யும் இந்தச் சமூகத்தில், பணம் என்பது ஒரு அளவுகோலாக, சாதியைப் போல பள்ளி வளாகத்தை மட்டுமல்ல இந்தச் சமுதாயத்தையும் மாற்றிவிடும் அபாயம் கொண்டது என புரியவைக்குமொரு படைப்பு இது.
‘எழுத்தாளன்’ – ஒரு எழுத்தாளன் வாழ்வை, அவனின் ஆரம்ப நாட்களை படம் பிடித்துக் காட்டுவதாய் இது உள்ளது. அதில் இருக்கும் பாத்திரங்கள் எழுத்தாளன் சமூகத்தில் மட்டுமல்ல அனைத்து தரப்பட்ட பணிகளிலும் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
இன்னும் இதில் உள்ள மீதி அனைத்துக் கதைகளும் தனித்துவம் பெற்றதாக இருக்கிறது. ஆனால் இந்த கலாசார பண்பாட்டு வித்தியாசங்களைக் காட்டிய ஆசிரியர், அதைக் கையாள்வதில் இன்னும் கொஞ்சம் வழிகாட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. மற்றபடி மனநிறைவான, பன்முகத்தளத்தில் வலம் வரும் இத்தொகுப்பு படிக்கவும், அதை மற்றவர்களிடம் பகிரவும் ஏற்ற ஒன்றாகும்.
– மா. ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா

புத்தக மதிப்புரையை வெளியிட்டு சிறப்பித்துள்ள மதிப்புரை.காம் தளத்திற்கும் மீண்டும் ஒரு நன்றி!

இணைப்பு: http://mathippurai.com/2015/03/06/ammaavin-thaenkuzhal-2/

'அம்மாவின் தேன்குழல்' புத்தகம் அகநாழிகை இணைய விற்பனையகத்தில் மார்ச் இறுதி வரை 30% தள்ளுபடி விலையில் (ரூ.91) கிடைக்கிறது.

இணைப்பு: http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1832



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..