நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை..

ந்த நடிகர் இவ்வளவு கொடுத்தார். அந்த நடிகர் அவ்வளவு கொடுத்தார். இன்னுமொரு நடிகர் இவ்வளவுதான் கொடுத்தார். அவரை நாயென்றும் பேயென்றும் சீயென்றும் திட்டிக்கொண்டு இருப்பது வருத்தமளிக்கிறது. அவ்வளவு ஏன்? என் நாவே இதில் எனக்குப் பகை. என் அறிவுக்கு இதில் நிச்சயம் உடன்பாடில்லை.

அப்படி உண்மையிலேயே கோபமிருந்தால் ஒன்று செய்யலாம். நாம் திட்டுகின்ற நடிகரின் அடுத்த படத்தின் பெயரிலேயே ஒரு கணக்கை ஆரம்பிப்போம். அந்தத் திரைப்படத்தை பார்ப்பதை தவிர்த்து விட்டு, ஒரு நூறு ரூபாயை அந்தக் கணக்கில் போட்டுவிடுங்கள். ஒட்டுமொத்த தமிழகமும் இதைச் செய்ய வேண்டிய தேவையில்லை. சென்னையில் மட்டுமே இதை செய்தால் கூட போதும். நிச்சயம் குறைந்தபட்சம் ஐம்பது கோடி ரூபாயாவது சேரும். அதை அப்படியே எடுத்து சென்னை மாநகரத்தை சீரமைக்க உபயோகப்படுத்திக்கொண்டு, 'தலைவா! நன்றி தலைவா!' என்று கைகூப்பி அந்த நடிகரை வணங்கி, வாழ்த்தி, பாராட்டு விழா கூட நடத்தலாம்.

யாரையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடவும் வேண்டாம். பின்பு கீழே போட்டு உடைக்கவும் வேண்டாம். உங்களையும் என்னையும் போலத்தான் அவர்களும். நடிப்பு அவர்களது தொழில். அவர்கள் வெறும் பொழுதுபோக்குக் கலைஞர்கள். படம் பார்த்துவிட்டு தியேட்டரிலேயே அவர்களை விட்டு விட்டுச் சென்று விட வேண்டும். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்களைத் தூக்கிக் கொண்டுபோய் நம் வீட்டுப் பூஜையறையில் கடவுளர் சிலையாகவும், படுக்கையறையில் பொம்மையாக்கி வைத்தும் பார்ப்பது நமக்கும் நல்லதில்லை. அவர்களுக்கே நல்லதில்லை.  நான் கூட பறந்துப் பறந்து கணிப்பொறி ஜாவா மொழியில் ஒரு மென்பொருள் எழுதுகிறேன் என்று உங்களை சிரிக்க வைப்பதற்குக் கூறினால், எனக்கு கட்-அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வீர்களா என்ன?

நானுமே ஒரு நடிகர் நாட்டை விட்டுப் போகிறேன் என்று கூறியவுடன் நான்கு பக்கங்களுக்குக் கவிதையெல்லாம் வரைந்தேன். ஒரு சிலர் வீட்டுப் பத்திரங்களையெல்லாம் அனுப்பிவைத்தார்கள். அவர்களே அவர்களது அண்டைவீட்டுக்காரனுக்கு ஏதேனும் என்றால் வீட்டுப் பத்திரத்தை கொடுக்க முன்வருவார்களா என்று தெரியவில்லை.

நாம் நடிகர்களுக்கு கொடுத்திருக்கும் இடம் அது. இது நிச்சயம் நம் பிழை. அவர்களுடைய பிழை அன்று. அவர்கள் திரைப்படங்களில் ஊருக்கே உதவுவது போல நடித்திருந்தாலும். அதைக் கண்டு ஏமாறுவது நம் பிழை. உண்மையில் அவர்கள் ஏமாற்றவும் முயலவில்லை என்றே எண்ணுகிறேன். தோசை விற்பவன் கூட எந்த வகை தோசை அதிகமாக விற்கிறதோ, அதைத்தானே தினமும் செய்வான். அது பொய்க்கும் வரையிலாவது. அவர்கள் வியாபாரிகள். நம் எல்லோரையும் போலவே. என் ஆறு வயது மகன் கூட, 'மனுஷங்க பறக்க முடியாது பா. சும்மா நடிக்கிறார்கள்' என்று கூறிவிடுவான். அவர்களைச் சாடுவதில் எந்தவித நியாயமும் இல்லை. அவர்களைச் சாடுவது என்பது நம்மையே சாடிக்கொள்வதாகும். இந்தியர்களுக்கு சினிமாவையும் கிரிக்கெட்டையும் அரசியலையும் விட்டால், வேறு எதுவும் தெரியாது. ஒவ்வொரு இந்தியனும் 'தலைவா' என்று அழைக்கும் நபர் நிச்சயம் இந்த மூன்று துறைகளில்தான் இருக்கவேண்டும் என்பது எழுதப்படா விதி. இவர்கள் புரியும் சாதனைகளே சாதனைகள். இப்படித்தான் எல்லாவற்றையும் கொன்றழித்தோம். மற்ற துறைகளில் இருக்கும் எத்தனையோ அறிஞர்கள் வெந்து நொந்து மரித்திருப்பார்கள். மொழி, இலக்கியம், ஓவியம், இசை (திரை இசையை தவிர்த்து), அறிவியல், மருத்துவம், வரலாறு, கணிதம், வணிகம், சமூக சேவை,  கிரிக்கெட் தவிர்த்து பிற விளையாட்டுகள்  இப்படி எத்தனை துறையில் நமக்கு தலைவர்கள் இருக்கிறார்கள்? தலைவர்களாக்குவதை விடுங்கள். குறைந்தபட்சம் சக மனிதர்களிடமிருந்து ஒரு பாராட்டு கூட அவர்களுக்குக் கிடைத்திருக்காது.

நாம் ஒவ்வொருவனும் தலைவனே என்பதை சென்னை நிரூபித்துக் காட்டியிருக்கிறது. இதுபோன்றதொரு பேரிடர் ஐரோப்பாவிற்கு வந்திருந்தால் கூட அரசாங்கம் திணறியிருக்கும். இங்கிலாந்தில் ஏற்பட்ட வெள்ளமே அதற்கு சாட்சி. ஆனால் அங்கு (இங்கு) அரசாங்கம் மட்டுமே போராடியிருக்கும். இத்தனை உள்ளங்கள் நீருக்குள் குதித்து போராடியிருக்காது என்பதை உறுதியாக என்னால் கூற முடியும்.
சக மனிதர்களுக்கு ஒன்று என்றால் ஒரே நாளில் ஒன்று திரண்டு, இனியொரு விதி செய்வோம் என்று பொங்கி எழுந்திருக்க மாட்டார்கள். பேரிடர் காலங்களில் சமூக வலைத்தளங்களை எப்படி உபயோகிக்கலாம் என்பதை (எவற்றை தவிர்க்கலாம் என்பதையும்) சென்னை உலகுக்கே பயிற்றுவித்திருக்கிறது. இந்திய ஆட்சிப் பணி மற்றும் மேலாண்மை பயிலும் மாணவர்களுக்கு இதை ஒரு பாடமாகவே வைக்கலாம்.

உங்கள் அனைவரையும் கைகூப்பி வணங்குகிறேன். என்னளவில் நீங்களெல்லாருமே தலைவர்களே. உங்களுக்கு எதற்குத் தலைவர்கள்?

உங்களைப் போன்ற தலைவர்களுக்கு நன்றி!

இனியொரு விதி செய்வோம்!


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..