"Like your Papa giving.."

(மீள்நினைவு)
ப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக நினைவு; ஒன்பதாகவும் இருக்கலாம். அது இப்போது முக்கியமில்லை. எங்கள் தெருவில் திருவிழாவோ அல்லது அண்டை வீட்டில் வேறு ஏதோ ஒரு நிகழ்வோ என்று நினைக்கிறேன். ஒலிப்பெருக்கியில் எல்.ஆர். ஈஸ்வரி உரத்த குரலில் மாரியம்மன் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். எனக்குக் காலாண்டு தேர்வோ அல்லது அரையாண்டு தேர்வோ நடந்து கொண்டிருந்தது. எல்.ஆர்.ஈஸ்வரி என்னைப் படிக்க விடாமல் சதி செய்து கொண்டிருந்தார். விழாக்குழுவினருக்கு தேர்வைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியும் எந்தக் கவலையும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர்களின் கொண்டாட்டம் அவர்களுக்கு முக்கியம். தேர்வு நாட்களில் மாணவர்களெல்லாம் தவ நிலையில் இருக்கும் முனிவர்களைப் போன்றவர்கள். அந்த சமயத்தில்தான் இதுபோன்ற திருவிழாக்களும், கிரிக்கெட் போட்டிகளும், சூப்பர் ஹீரோக்களின் திரைப்படங்களும் அப்சரஸ் அழகிகளான ரம்பை, மேனகை, ஊர்வசி போன்று மாணவர்கள் முன்பு தோன்றி, தவத்தைக் கலைக்க நடனமாடுவார்கள். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போதெல்லாம் அப்படி ஒரு முனிவனாய் என்னை நான் உணர்ந்ததுண்டு.

நான் வழக்கமாக எங்கள் வீட்டு மாடியில் அமர்ந்துதான் படிப்பேன். சில சமயம் தண்ணீர்த் தொட்டிக்கு அருகில். அந்தக் குறுகிய வீட்டின் இருட்டுக்குள் அமர்ந்து படிப்பதற்கு எனக்குப் பிடிக்காது. அதற்காகவே காலை, மாலை வேளைகளில், குறிப்பாக மாலையில் திருப்பத்தூர் இரயில்வே நிலையத்துக்குச் சென்று, அங்கு நடைமேடையின் மீதமைந்த நீள் இருக்கையில் அமர்ந்து படிப்பதுண்டு. அவ்வப்போது என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பீம்ராவும், செல்வமும் என்னோடு சேர்ந்துகொள்வார்கள். உண்மையில் இதை ஆரம்பித்து வைத்தவன் செல்வம்தான் என்று நினைக்கிறேன். செல்வம் அவ்வளவாக வாயைத் திறக்கமாட்டான். அதனால் எந்தப் பிரச்சினையுமில்லை. பீம்ராவுடன் அங்கே படிக்கச் சென்ற சமயங்களில், படித்ததை விடப் பேசியதுதான் அதிகம். அவனுக்கு நான் இடையூறு. எனக்கு அவன். நானும் அவனும் ஆபத்தான கூட்டாளிகள் என்று எனக்கு மிகவும் பிடித்த பள்ளி ஆசிரியர் வல்லபதாஸிடம் விருது வாங்கியிருக்கிறோம். நாங்கள் இருவரும் சேர்ந்து பள்ளியிலும் வெளியிலும் சேர்ந்து செய்த சேட்டைகளைப் பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் எங்களின் கலகம் என்றும் நன்மையில்தான் முடியும். இன்றைக்கும் ஒருமையிலும், விலங்குகளின் பெயர்களையும் சொல்லி ஒருவரையொருவர் மரியாதையோடு விளித்துக் கொள்ளும் அளவில் நட்பு தொடர்கிறது. "முடி" சிறுகதையில் வரும் மிலிந்தன் இவனே. நான் சிறுவயதில் நண்பர்களின் வீடுகளுக்கு அதிகமாகச் சென்றதில்லை. அப்படியே சென்றாலும் அங்கு நீண்ட நேரம் இருந்ததில்லை. ஆனால் பீம்ராவ் வீடும், இன்னொரு நண்பன் புகழேந்தியின் வீடும் மட்டும் அதற்கு விதிவிலக்கு. பீம்ராவ் வீட்டிற்குச் செல்வதற்கு இரயில் நிலையத்தைக் கடந்து செல்ல வேண்டும். அங்கிருந்து அவன் வீடு ஐந்து நிமிடம்தான். படித்துக்கொண்டிருக்கும்போது பசி எடுத்தால் நேராக அவன் வீட்டிற்கு அடைக்கலம் புகுந்து விடுவோம். அவன் வீட்டுக்கு அருகிலேயே நண்பர்கள் புஷ்பநாதன், சந்தோஷ் வீடுகள் இருந்ததால் அனைவரும் தெருவிலேயே நீண்ட நேரம் அரட்டையடித்துக்கொண்டிருப்போம். 

நாங்கள் அடிக்கடி சென்று கிரிக்கெட் விளையாடும் இரண்டு மைதானங்களுமே இரயில் நிலையத்தை ஒட்டியே அமைந்திருக்கும். அதனால் எனக்கும் இரயில் நிலைத்திற்கும் படிப்பு, அரட்டை, விளையாட்டு என்று வலுவானதொரு பிணைப்பு உண்டு. மாலை வேளைகளில் இரயில் நிலையத்தைச் சூழ்ந்த அமைதியும், நீள் இருக்கைகளுக்கு அருகிலேயே நடைபாதை விளக்குகளும் படிப்பதற்கு ஏதுவாக இருந்ததால், சில நாட்கள் ஒன்பது, பத்து மணி வரையெல்லாம் படிப்பதுண்டு.

அன்று திருவிழா ஏற்படுத்திய இரைச்சலால் அடுத்த நாள் தேர்வுக்குப் படிக்க முடியாமல் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு இரயில் நிலையத்துக்கு விரைந்தேன். நான் வழக்கமாக அமரும் இருக்கை, நிலையத்திலிருந்து சற்றுத் தள்ளி, நடைமேடையின் இறுதியில் ஒன்றிரண்டு மரங்கள் புடைசூழ அமைந்திருக்கும். என்னளவில் அது ஒரு ராஜ சிம்மாசனம். சில நாட்களில் மலர் மஞ்சமும் கூட. அந்தப் பகுதியில் நடைமேடையும் சற்று அகலமாகவே இருக்கும். வெகுசில பயணிகள், ஓரிரு இரயில்வே ஊழியர்கள், எப்போதாவது நடைபயிற்சி செய்யும் வயதானவர்களைத் தவிர வேறு யாரும் நாங்கள் இருக்கும் பகுதி வரை வந்ததில்லை. எப்போதாவது இரயில் வண்டிகள் கடந்து போகும்போது ஏற்படும் சப்தத்தையும், அதிர்வையும் தவிர வேறு எந்த இடையூறும் அங்கு கிடையாது. திருப்பத்தூருக்கு அருகிலேயே அதைவிட சற்று பெரிய அளவிலான ஜோலார்பேட்டை சந்திப்பு இருந்ததால் முக்கியமான இரயில்கள் எதுவும் திருப்பத்தூர் இரயில் நிலையத்தில் நிற்காது. எப்போதாவது ஓரிரு வண்டிகள் நிற்கும்போது மட்டும் விற்பனையாளர்களின் "டீ காபி போண்டா.. டீ காபி போண்டா" கதறல்கள் கேட்கும்.

அன்றைக்கு செல்வம் எனக்கு முன்னரே அங்கு வந்து அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அளவளாவி விட்டு நான் என்னுடைய இருக்கையைப் பிடித்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிட்டேன். இரயில்வே நிலையத்துக்கு படிக்கச் செல்லும்போதெல்லாம் என்னுடைய அம்மா ஒரு கைப்பை நிறைய நிலக்கடலையையும், தின்பண்டங்களையும் கொடுத்து அனுப்பி விடுவார். பீம்ராவ் அதற்காகவே இரயில் நிலையத்துக்கு வருவான் என்று நினைக்கிறேன். ஒரு பக்கத்துக்கு இரண்டு நிலக்கடலை வீதம் கணக்கு வைத்து படித்துக் கொண்டிருப்பேன்.

அன்றைக்கு ஒரு நீண்ட பயணிகள் விரைவு இரயில் வண்டி வந்து நின்றது. அது வழக்கமாக எங்கள் நிலையத்தில் நிற்கும் வண்டியாகத் தெரியவில்லை. நான் அமர்ந்து கொண்டிருந்த பகுதியில்தான் முதல் வகுப்புப் பெட்டி நின்று கொண்டிருந்தது. உள்ளே நடப்பது எதுவும் வெளியில் தெரியாது. ஆனால் உள்ளிருந்து வெளியே பார்க்கலாம் என்று அப்போது எனக்குத் தெரியாது. என்றாவது ஒருநாள் முதல் வகுப்புப் பெட்டிக்குள் சென்று எப்படி இருக்கிறதென்று பார்த்துவிட வேண்டும் என்று எனக்கொரு ஆசை இருந்தது. வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த அந்த வண்டி வடநாட்டிலிருந்து கேரளாவிற்குச் சென்று கொண்டிருக்க வேண்டும்.

வண்டியைப் பார்ப்பதும் படிப்பதுமாக இருந்தேன். எதிரே நின்று கொண்டிருந்த முதல் வகுப்புப் பெட்டியின் கதவைத் திறந்து வெளியே வந்த ஒரு மனிதர் என்னைப் பார்த்துச் சிரித்தபடி, "இங்கே வா." என்று அழைத்தார். நான் செல்வத்தைத் திரும்பிப் பார்த்தேன். அவரோ, "இரண்டு பேரும் இங்கே வாருங்கள்" என்று ஹிந்தியில் அழைத்தார். சில சமயங்களில் எங்களை பயணிகள் தண்ணீர் பிடித்துத் தர வேண்டுவார்கள். ஒருவேளை தண்ணீர் பிடித்து வரச் சொல்வதற்காக அழைக்கிறாரோ என்று எண்ணியபடியே புத்தகங்களை இருக்கையில் வைத்து விட்டு அவருக்கு அருகே சென்றோம். அவர் குர்தா அணிந்திருந்தார். குள்ள உருவம். சற்று பருமனான உடல்வாகு. கோதுமை நிறம். புன்னகை ஏந்திய நன்முகம். கிட்டத்தட்ட பாடகர் உதித் நாராயணன் முக ஜாடை. அவர் இப்படித்தான் என் மனதில் பதிந்திருக்கிறார்.

முதலில் ஹிந்தியில் அழைத்தவர் பிறகு, "இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று ஆங்கிலத்தில் வினவினார். அவர் பெட்டிக்குள்ளிருந்தே எங்களை நீண்ட நேரம் கவனித்திருக்க வேண்டும்.

பள்ளியில் நாங்கள் ஆங்கிலத்தில் பேசியதில்லை. வெள்ளிக்கிழமை தோறும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்றொரு விதி இருந்தது. ஆங்கில ஆசிரியர் ராஜி உருவாக்கிய விதி. பெரும்பாலான மாணவர்களுக்கு அது பிடிக்கவில்லை. எங்களுக்கு, குறிப்பாக, எனக்கும் பீம்ராவுக்கும் வெள்ளிக்கிழமை வந்தாலே ஒரே கொண்டாட்டம்தான். அன்று வெள்ளிக்கிழமையல்லாத ஒரு நாளில் ஆங்கிலம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததால் எனக்கு ஒரே சந்தோஷம். அவர் பேசிய இந்தி வார்த்தைகளும் ஒன்றிரண்டு புரிந்தது. அதற்குக் காரணம் நண்பன் புஷ்பநாதன். அந்நாட்களில் எங்கள் வகுப்பிலேயே இந்தி நன்றாகப் பேசத் தெரிந்த ஒரே ஆள் அவன் மட்டுமே. அவன் வற்புறுத்தியதன் பேரிலேயே நான் மத்யமா வரைப் பயின்று இராஷ்ட்டிர பாஷாவில் கோட்டை விட்டேன். மும்பையில் பணியாற்ற நேர்ந்த பொழுது அவனுக்கு மானசீகமாக நன்றி சொல்லியிருக்கிறேன். 

அவருடைய கேள்விக்கு, "தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கிறோம்." என்று ஆங்கிலத்தில் நான் பதிலளித்தவுடன் அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. வண்டியிலிருந்து இறங்கி வந்து எங்களை அணைத்துக் கொண்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. படித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியதற்கு ஏன் இந்த மனிதர் இத்தனை உணர்ச்சிவசப்படுகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பச்சை விளக்கு விழுந்து இரயில் கிளம்ப ஆயத்தமானது. திடீரென்று என்ன நினைத்தாரோ, தன்னுடைய சட்டைப்பையிலிருந்து நூறு ரூபாயை எடுத்து என் கையில் திணித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நடுக்கமே வந்துவிட்டது. ஒருவேளை இந்த மனிதர் குடித்திருக்கிறாரா? குடிபோதையில்தான் மனிதன் ஒன்று மிருகமாகிறான் அல்லது குழந்தையாகிறான். இவர் குழந்தைபோல் நடந்துகொள்கிறாரே. ஆனால் அவர் நிச்சயம் குடித்திருக்கவில்லை.

"எங்களுக்குப் பணம் எதற்கு? வேண்டாம்!" என்று மறுத்து அவர் கையிலேயே மீண்டும் திணிக்க முயன்றேன்.

அவர் விடவில்லை. "Like your papa giving.. Like your papa giving.." என்று கூறி மீண்டும் என் உள்ளங்கையில் வைத்து மூடிவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டார்.

"எனக்கு என் பெற்றோர் பணம் தருகிறார்கள். இது வேண்டாம். இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது?" என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே இரயில் கிளம்பிவிட்டது.

அவரோ மீண்டும் "Like your papa giving.. please go and have some good food." என்று புன்னகைத் தவழ கூறிக்கொண்டே கையசைத்தார்.

நானும் செல்வமும் வண்டியுடனே சிறிது தூரம் துரித கதியில் நடந்து சென்றோம். வண்டி வேகமெடுத்தது. அவர் கண்ணிலிருந்து மறையும் வரை கையசைத்துக்கொண்டே சென்றார். நாங்கள் ஒன்றும் புரியதவர்களாய் அசைவற்று அங்கேயே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தோம். அதற்கு மேல் படிக்கவே தோன்றவில்லை. என் கையில் நூறு ரூபாய் பணம். அந்நாட்களில் நூறு ரூபாய் என்பது பெரிய தொகை. பள்ளியில் நான்கு நாள் உல்லாசச் சுற்றுலாவுக்கே ஐம்பது ரூபாய்தான் கேட்பார்கள். அதற்கும் வீட்டில் அனுமதி கிடைப்பது கடினம். வீட்டிலிருந்து தின்பண்டச் செலவுக்கு ஐம்பது பைசா வாங்கிக் கொண்டிருந்த காலம் அது. இந்த மனிதர் என்ன நினைத்திருப்பார். எங்களைப் பரம ஏழைகள் என்று நினைத்திருப்பாரா? வீட்டில் விளக்கு இல்லாததால் தெரு விளக்கில் படிக்கிறோம் என்று நினைத்திருப்பாரா? அல்லது ஒருவேளை சிறுவயதில் ஏழையாக இருந்திருப்பாரோ? படிப்பால் உயர்ந்த நிலைக்குத் தான் வந்துவிட்டதால் எங்கள் படிப்பார்வத்தை ஊக்குவிக்க முனைந்தாரா? அல்லது எங்கள் வயதில் அவருக்கு ஒரு மகன் இருப்பானோ? எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

இதுபற்றிய பேச்சிலேயே நீண்ட நேரம் ஓடிவிட்டதால், என் தந்தை இரயில் நிலையத்துக்கே என்னைத் தேடிக்கொண்டு வந்து விட்டார். அவரிடம் நடந்ததை கூறினோம்.

"இதுபோன்ற மாமனிதர்களால்தான் நான் இன்றைக்கு நல்லதொரு நிலையில் இருக்கிறேன். இல்லையென்றால் என்னுடைய கல்லூரிப் படிப்பைக்கூட கடந்திருக்க முடியாது. நல்ல மனிதர்." என்றார்.

அந்த நூறு ரூபாயை என் தந்தையிடம் கொடுத்தேன். அவரும் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்.

"அது உங்களுக்காக அவர் கொடுத்தது. நல்ல உணவு வாங்கிச் சாப்பிடச் சொல்லியிருக்கிறார். நாளைக்கு தேர்வு முடிந்தவுடன் ஓட்டலுக்கு செல்லுங்கள்." என்று யோசனை சொன்னார். அடுத்த நாள் தேர்வு முடிந்தவுடன், பேருந்து நிலையம் அருகேயுள்ள லக்ஷ்மி கபேவில் மசாலா தோசை சாப்பிட்டு விட்டு, அருண் ஐஸ்க்ரீமில் கசாட்டா துண்டு சாப்பிட்டது இன்றும் நினைவிலிருக்கிறது.

அன்றைய இரவு எனக்கு நீண்ட நேரம் உறக்கமே வரவில்லை. அந்த மனிதரின் நினைவு மீண்டும் மீண்டும் வந்து அழுத்தியது. அவரது செய்கை அந்த வயதில் எனக்குப் புரியவில்லை. இன்னும் சற்று நேரம் அந்த நல்ல மனிதருடன் பேசியிருக்கலாம் என்று தோன்றியது. இன்றும் தோன்றுகிறது. அவர் பெயரைக்கூட கேட்காமல் விட்டு விட்டோமே. முகவரியைக் கேட்டிருக்கலாமே. அவரும் எங்களிடம் இதையெல்லாம் கேட்கவில்லையே. அதற்கான கால அவகாசம் கிடைக்கவில்லையே. அந்தத் தேர்வு காலாண்டா அரையாண்டா என்பது நினைவில்லை. பாடம் அறிவியலா, கணிதமா என்று நினைவில்லை. பத்தாம் வகுப்பு என்று கூறியதில்கூட சந்தேகமே. தெருவில் என்ன திருவிழா என்பதும் நினைவிலில்லை. என்னுடன் அந்த வகுப்பில் படித்த பெரும்பாலானவர்களின் பெயரும், சிலருடைய முகங்கள்கூட நினைவிலில்லை. ஆனால் அந்த மனிதரின் புன்னகையேந்திய முகம் இன்றளவும் நன்றாக என் நினைவிலிருக்கிறது; இருபத்து நான்கு ஆண்டுகள் கழித்து என்னை எழுதவும் தூண்டியிருக்கிறது.  

இன்றைக்கு நான் அவருக்கு செய்யக் கூடியது ஒன்றுதான். அது, அவரைப்போலவே 'Like your papa giving.." என்று படிப்பார்வம் மிகுந்த குழந்தைகளின் படிப்புக்கு அவர் நினைவாக உதவி புரிவது; அவர்களை ஊக்கப்படுத்தி வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏர்படுத்துவது. அதுதான்அந்தத் தந்தை எனக்கு அன்றைக்குக் கற்றுக் கொடுத்து விட்டுப் போனது.

இரயில் நிலையத்தில் வண்டி நின்று கொண்டிருக்கும்போது கிடைத்த சில மணித்துளிகளிலேயே ஒரு சிறுவனின் உள்ளத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட அந்த மாமனிதரால் முடிந்திருக்கிறது என்றால் நம் வாழ்நாள் முழுவதும் எத்தனைக் குழந்தைகளுடைய வாழ்கையை நம்மால் மேம்படுத்த முடியும் என்று எண்ணிப் பார்க்கிறேன்.
  
Thank you papa for your benignity and the care you showed towards this lad! Thinking of you this day.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..