பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

ந்தப் புகைப்படத்தை நான் இந்தியாவுக்கு வந்திருந்த பொழுது சென்னையில் என்னுடைய கல்லூரி நண்பர்கள் விஸ்வநாதன், கலையரசனுடன் எடுத்துக்கொண்டவை. அம்மாவின் தேன்குழல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'அமைதியின் சத்தம்' மற்றும் 'எழுத்தாளன்' கதையில் வரும் பாத்திரங்களுக்கு இவர்களின் பெயரைத்தான் வைத்திருந்தேன்.

விச்சா பலகுரல் மன்னன். பாலையா முதல் டைனசர் வரை அத்தனையையும் மிமிக் செய்வது என்பது அவனுக்கு வாய் வந்த கலை. அதுவும் ஜுராசிக் பார்க் திரைப்பட மிமிக்ரியை அவன் அரங்கத்தில் செய்துகாட்டும் பொழுது அவன் வாய்க்குள்ளிருந்து டைனசர்கள் DTS எபக்ட்டில் வெளியே வந்து நெஞ்சை அதிர வைக்கும். மிகையே இல்லை. கோவை PSG கல்லூரியில் சேர்ந்த முதல் வருடத்திலேயே அவனுக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. இறுதியாண்டில் 'Dramatix Club' செயலராக இருந்தான். பிரம்மாண்டமான கல்லூரி விழாக்களெல்லாம் அவன் தலைமையில் நடத்தியிருக்கிறோம். நையாண்டி நாடகங்கள், நடனங்கள், அபிநயக்கூத்துகள் என்று பல கல்லூரிகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வென்றிருக்கிறோம். MIME-க்கு முழுக்க முழுக்க நான்தான் பொறுப்பு. 'முழுக்க முழுக்க' என்று சொல்லக்கூடாது. அதில், இன்னும் பலருக்கும், குறிப்பாக என் மற்றொரு நண்பன் T.P.கார்த்திக்குக்கும் பெரும் பங்கு உண்டு. 'அம்மாவின் தேன்குழல்' கதையின் முக்கியக் கதாபாத்திரத்தின் பெயரும் கார்த்திக்கே. ஆனால், அவன் இன்று வரை அந்தக் கதையை படித்தானா என்று தெரியவில்லை; படித்ததில்லை என்று நினைக்கிறேன்.

என் வாழ்க்கையின் மிக நெருக்கடியானதொரு தருணத்தில் என்னோடு இருந்த மிகச் சொற்ப நண்பர்களில் மிகவும் முக்கியமானவன் விச்சா. அந்தக் கதையைத் தனியாகத்தான் எழுதவேண்டும். நண்பன், நாடகச் சங்க செயலர், கலைஞன் என்பதனைத்தையும் தாண்டி அவனிடம் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் இரண்டு. ஒன்று, அவனுடைய அபாரமான நினைவாற்றல். இரண்டாவது அவனுடைய பேச்சுத்திறம். என்றைக்கோ நடந்த உரையாடலைக் கூட ஒரு வார்த்தை விடாமல் அவனால் அப்படியே திரும்பச் சொல்ல முடியும். என்றைக்கோ நடந்த சம்பவத்தைக்கூட விரிவாக, இன்னமும் கொஞ்சம் சுவாரசியம் கூட்டி, அவனால் அருமையாக விளக்க முடியும். கல்லூரியில் பல இரவுகள் இப்படிப் பேசிக் கழிந்திருக்கிறது. அப்போது சரி. ஆனால், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அதே சுவாரசியம் குன்றாமல் அன்றைக்கு நடந்ததை எப்படி அவனால் இப்படி விளக்க முடிகிறது?

ஒருவேளை என்னுடைய சுயசரிதத்தை வருங்காலத்தில் நான் எழுத முனைந்தால் அதற்கு அவனிடமிருந்து நிச்சயம் அதன் பல பக்கங்களை கடன் வாங்க வேண்டியிருக்கும். இப்படி என் கல்லூரி நண்பர்கள் பலருடைய பக்கங்களை அவனுடைய ந்யூரான்களில் சேமித்து வைத்திருக்கிறான். மேல்நாடுகளில்  அப்போதெல்லாம் குடும்ப பைபிள் எழுதும் பழக்கம் இருந்தது. தலைமுறையாக குடும்ப வரலாற்றை பல்வேறு விவரக் குறிப்புகள், புகைப்படங்கள், செய்தித்தாள்களில் வந்த துணுக்குகள் என்று பல சுவாரசியமான தகவல்களுடன் அதில் பதிவு செய்வார்களாம். குறிப்பாக இங்கிலாந்தில் விக்டோரியா மகாராணி காலத்தில் அது ஒரு பொதுவான நடைமுறையாக இருந்தது. இதைப் பற்றி அறிய நேர்ந்த பொழுது என்னுடைய குடும்பத்தைப் பற்றி ஏதாவது கிடைக்குமா என்று யோசித்துப் பார்த்தால், தாத்தா சேர்த்து வைத்திருந்த கடிதங்கள் மட்டுமேநினைவுக்கு வருகிறது. ஒரு கம்பியில் அவர் கோர்த்து வைத்திருந்த கடிதங்களை அவருடன் அமர்ந்தே வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு கடிதமும் பல சுவாரஸ்யங்களைத் தாங்கியிருந்தது. குடும்பம் மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி என்று நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நம் வாழ்வில் நாம் சந்தித்த எத்தனையோ மனிதர்களை மறந்துவிட்டோம். அவர்களைப் பற்றி பதிவு செய்ய வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. குறிப்பாகக் கல்லூரி நாட்களைப் பற்றி 'கோவை கணங்கள்' என்கிற தலைப்பில் நிச்சயம் எழுதுவேன் - புனைவாகவோ அல்லது அபுனைவாகவோ. அதற்கு விச்சாவுடைய நினைவாற்றலையே அதிகமாக நம்பி இருக்கிறேன். அவ்வளவு ஏன், இவனுக்கு மட்டும் ஒரு Amanuensis கிடைத்தால் மிகச் சிறந்த எழுத்தாளராகி விடுவான். அப்படி அவனுக்கு வியாசனாகும் விருப்பமிருந்தால் நானே விநாயகராகவும் தயாராக இருக்கிறேன்.

அவன், இவன் என்று எழுதிக் கொண்டிருக்கிறேன். நெருங்கிய நண்பர்களையெல்லாம் என்னால் உயர்திணையில் அழைக்க இயலாது. அம்மாவின் தேன்குழல் புத்தக விழா ஏற்புரையின்போதே நண்பன் சச்சிதானந்தத்தின் படைப்புகளைப் பற்றி பேசும் போதும் அவர்..ன்.. என்று  சற்று திணறினேன்.

கலையரசன், 'எழுத்தாளன்' கதையில் வரும் பதிப்பாளர். -) இவனைப் பற்றி ஒரு பத்தியில் சுருக்கி எழுதவியலாது. அவன் பெயரை நினைத்த மாத்திரத்தில் எண்ணத் துகள்கள் வந்து என் முன்னே கொட்டுகிறது. கோவைக் கணங்களில் பல பக்கங்கள் இவனுக்காக ஒதுக்க வேண்டும். கோவை கலவரங்களின் போது அவனுடன் இரு சக்கர வண்டியில் தப்பித்து சந்து பொந்திலெல்லாம் ஒடியதும், கோவை குண்டுவெடிப்பின் போது பேருந்து, ஆட்டோ எதுவும் கிடைக்காமல், அடுத்து எங்கு வெடிக்கப்பொகிறதோ என்று கலவரத்துடன் நடந்தே வந்து சேர்ந்ததும் நினைவுக்கு வருகிறது. கலவரங்களுக்கும், இவனுக்கும், எனக்கும் அப்படி என்ன பொருத்தம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. கல்லூரி நாட்களில் பல வார இறுதிகள் இவன் வீட்டில்தான் கழியும். கலையின் பெற்றோர்களுக்கு நாங்கள் அனைவருமே செல்லப் பிள்ளைகள். கோவையில் வீட்டை வைத்துக்கொண்டு பெரும்பாலான நாட்கள் எங்களுடன் விடுதியிலேயே வந்து தங்கியவன், மூன்றாம் ஆண்டில் பெற்றொர்களிடம் என்னென்னவோ காரணங்கள் சொல்லி இறுதியாக விடுதிக்கே மொத்தமாக வந்துவிட்டான். அவனுக்குக் கோபம் வந்து திட்டினால் கூட நமக்குத் துளி கோபம் வராது. நாங்கள் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்போம். "நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்", என்பான். அதற்கும்  நாங்கள் சிரிப்போம். ஏனெனில் அந்தக் கோபத்தில் அத்தனை மென்மை இருக்கும். Such a sweet boy! :-)

மீண்டும் வருமோ அத்தினங்கள்?



கருத்துகள்

  1. நல்ல பதிவு கல்லூரிக்காலங்களை எனக்கும் நினைவு படுத்தியது வாசித்ததும். அவசியம் கோவைக்கணங்கள் எழுதுங்கள் என கோவைக்காரியாக கேட்டுக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..